சீதுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டிற்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதி!
புதிய இணைப்பு
துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான நபர் கொட்டகொட புபுதுமாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார். குறித்த நபர் தனது தாயுடன் ஸ்கூட்டரில் பயணித்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் வாயில் பலத்த காயம் அடைந்த அவர் ராகம மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எனினும், துப்பாக்கிச் சூட்டில் அவரது தாயாருக்கு காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நபர் மினுவாங்கொட பிரதேசத்தில் இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருவதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - சீதுவை, கொட்டுகொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இன்று ( 26.11.2023) சீதுவ தேவாலய சந்தியில் காலை 11.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டிற்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.