மோதலை தடுக்க சென்ற நபருக்கு நேர்ந்த துயரம்
காலியில் உள்ள உணவகம் ஒன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
காலி படபொல படதுவ பகுதியில் நேற்று (23) இரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த நபர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கொய்துடுவ பிரதேசத்தை சோ்ந்த 37 வயதான நபரே உயிாிழந்துள்ளாா். இந்த நபர் கொலை வழக்கில் பிணையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவினருடன் மோதல்
குறித்த நபர் மூவருடன் மது அருந்திக் கொண்டிருந்த போது அருகில் மது அருந்திக் கொண்டிருந்த மற்றுமொரு குழுவினருடன் மோதல் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் மோதலை சமரசம் செய்ய தலையிட்ட நிலையில் சம்பவத்தின் பின்னர் அவர் தொடர்ந்து மது அருந்திவிட்டு உணவகத்தில் தங்கியுள்ளார்.
இதன்போது தலைக்கவசம் அணிந்து கூரிய ஆயுதங்களை ஏந்திய இருவர் இவரை உணவகத்தின் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.