மிகவும் ஆபத்தானது 'மு' வைரஸ்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், அடுத்த கட்டமாக தற்போது பல்வேறு உருமாற்றம் அடைந்து, 'மு' என்ற மாற்றத்தை எடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது மாற்றம் அடைந்து ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வகையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இவற்றில் டெல்டா பிரஸ் வகை வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும், அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்துவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முதல் முறையாக கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 'மு' வகை உருமாற்ற கொரோனா வைரஸ், தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கும் வல்லமை கொண்டதாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுவரை 193 நாடுகளில் ஆல்ஃபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் 170 நாடுகளில் டெல்டா வகை வைரஸ்களும், மு உள்ளிட்ட 5 வகை வைரஸ்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வைரசை விட பல மடங்கு வீரியமானது மு வைரஸ் என்றும், இந்த வைரஸ் பரிசோதனைகள் சிக்காமல், தீவிரமாக தாக்கும் தன்மை கொண்டதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனாவின் மூன்றாவது அலையில் இருந்து பாதுகாக்க 2 டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் போடுவது அவசியம் என கொரோனா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.