முன்னாள் காதலர்கள் ஒன்று கூடும் வினோத காதல் சந்தை; எங்கே தெரியுமா!
வியட்நாமின் ஹா ஜியாங் (Ha Giang) மலைப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் 'காவ் வாய் காதல் சந்தை' (Khau Vai Love Market) குறித்த தகவல் இணையவாசிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
காதலையும் பழைய நினைவுகளையும் கொண்டாடும் இந்த விசித்திரமான பாரம்பரிய நிகழ்வு, வியட்நாம் நாட்டின் முக்கிய கலாசார அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எந்தவித வணிகப் பொருட்களும் விற்கப்படாத சந்தை
எந்தவித வணிகப் பொருட்களும் விற்கப்படாத இந்த சந்தை, பிரிந்துசென்ற முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்வதற்காகவே பிரத்தியேகமாக நடத்தப்படுகிறது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக, வேறுபட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு காதலர்கள் குடும்பப் பின்னணி மற்றும் கலாசார வேறுபாடுகளால் இணைய முடியாமல் பிரிந்தனர்.
எனினும், தங்கள் அன்பைப் போற்றும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை சந்திர நாட்காட்டியின் 3 ஆம் மாதம் 27 ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவது என வாக்குறுதி அளித்தனர்.
அவர்களின் இந்த அரிய நினைவைப் போற்றும் வகையிலேயே இத்திருவிழா தொடங்கப்பட்டது. திருமணமான தம்பதிகள் தங்கள் தற்போதைய துணையின் முழு சம்மதத்துடனும் மரியாதையுடனும் தங்களின் முன்னாள் காதலர்களைச் சந்திக்க இங்கு வருகை தருகின்றனர்.
3 நாட்களாக நடைபெறும் இந்த விழாவில் பாரம்பரிய இசை, நடனம், உணவு வகைகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இங்கு பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் முன்னாள் காதலர்கள், தற்போதைய குடும்ப வாழ்க்கையைப் பாதிக்காத வகையில் அன்புடன் மீண்டும் விடைபெற்றுச் செல்வதாகவும் கூறப்படுகின்றது.