இலங்கை மக்கள், தெரியாம பேசிட்டேன் மன்னிச்சிடுங்க ; பகிரங்க மன்னிப்புக் கோரிய இந்தியர்
சென்னை விமான நிலையத்தில் வைத்து இலங்கை தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்துக்காகப் பயணியொருவர் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளதுடன், அது குறித்த விளக்கத்தையும் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 'டிட்வா' (Ditwah) புயல் அனர்த்தம் காரணமாக இலங்கையில் விமான நிலையங்களில் சிக்குண்டிருந்த பயணிகள் சென்னை திரும்பியிருந்தனர்.

இனி இலங்கை பக்கமே போகமாட்டேன்
இதன்போது சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களிடம் பேசிய பயணி ஒருவர், "இனி இலங்கை பக்கமே போகமாட்டேன், விட்டா போதும்னு வந்துட்டேன்" என தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியிருந்தது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
"சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களிடம் பேசியபோது, நான் பொதுவாகப் பயன்படுத்திய 'ஸ்ரீலங்கா' என்ற வார்த்தைக்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறேன்.
எங்களை நீண்ட நேரம் காக்க வைத்ததும், எந்தத் தீர்வும் வழங்காமல் உண்மையான நிலையைத் தெளிவுபடுத்தாத ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மீதான கோபத்திலுமே நான் அவ்வாறு பேசினேன்" என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தாம் வீடு திரும்பிய பின்னரே இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவின் உண்மையான சூழ்நிலையை முழுமையாக அறிந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக என் மனம் மிகவும் வருந்துகிறது.
இந்த நிலையை மாற்றி, இலங்கையில் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பப் பிரார்த்திக்கிறேன்" எனவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.