இதற்கான அதிகாரம் அரசாங்கத்திடம் இருக்கிறது!
அரசாங்கத்திற்கு நாட்டு மக்களின் சுகாதார நலனைப் பாதுகாப்பதற்காக அடிப்படை உரிமைகளை வரையறுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் காணப்படுகிறது. எனவே இதனை உணர்ந்து எதிர்த்தரப்பினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இன்று (16) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் வினவிய போது அமைச்சர்களாக டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) மற்றும் உதய கம்மன்பில (Udaya Gammanpila) ஆகியோர் இவ்வாறு பதிலளித்தனர்.
அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிக்கையில்,
எந்தவொரு தரப்பினராலும் வெளிபடுத்தப்படும் எதிர்ப்புக்களை ஏற்றுக் கொள்ளும் அரசாங்கம் எமது அரசாங்கமாகும். கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற எந்தவொரு ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர் புகைப்பிரயோகமோ அல்லது நீர்தாரை பிரயோகமோ மேற்கொள்ளப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் நாம் ஒருபுறம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமைகளை பாதுகாக்கும் அதே வேளை , கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சகலவற்றையும் முன்னெடுக்க வேண்டும்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட பல சுகாதார தரப்பினரும் இவ்வாறு பாரிய மக்கள் கூட்டத்தை ஒன்று சேர்க்க வேண்டாம் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர். மாறாக அரசாங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை முடக்குவதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்றார்.
அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 15 ஆம் உறுப்புரையில், 'பொதுமக்களின் சுகாதார நலனைப் பாதுகாப்பதற்காக அடிப்படை உரிமைகளை வரையறுப்பதற்கு அரசாங்கத்திற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் காணப்படுகிறது.' என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்ககும் அதிகாரமுடையவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆவார். எனவே அவரால் எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்றதிகாரி உள்ளிட்ட முழு அமைச்சரவையும் ஏற்று செயற்பட வேண்டும் என்றார்.