விவசாயிகளை கைவிட்டுவிட்டது அரசாங்கம் ; சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
விவசாயிகளை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இன்று ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையும் கைவிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
CIFL நிதி நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டு பாதிக்கப்பட்ட தரப்பினருடன் இன்று (18) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் கண்ணீர் சிந்திய தற்போதைய ஆட்சியாளர்களின் நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்னர் முதலைக் கண்ணீராக மாறிவிட்டதாக அவர் சாடினார்.

விதை, உரம், விவசாய இரசாயனப் பொருட்கள், விவசாய உபகரணங்கள், யானை-மனித மோதல்கள் மற்றும் விளைபொருட்களுக்கு நிலையான விலை இல்லாமை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு விவசாயிகள் முகங்கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நகைகளை அடகு வைத்து அதிக செலவில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, அறுவடையின் பின்னர் நியாயமான விற்பனை விலை கிடைக்காத நிலை தொடர்வதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
17,000 ரூபாவாக காணப்பட்ட உர மூட்டையை 10,200 ரூபாவுக்கு வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், தற்போது நாட்டில் கடுமையான உரத் தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை வழங்கப்படும் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அம்பாறை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் 70 முதல் 80 ரூபாய் வரையிலான விலைக்கே விற்பனை செய்யப்படுவதாகவும், வாக்குறுதியளிக்கப்பட்ட உத்தரவாத விலை எங்கே எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
யானை-மனித மோதலால் பயிர்கள், சொத்துகள் மற்றும் உயிர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையில், விவசாயிகளுக்காக குரல் கொடுத்த ஆளும் தரப்பினரை இன்று களத்தில் காண முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் உணவுப் பாதுகாப்பும் குழந்தைகளின் கல்வியும் சவாலுக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இந்த நிலைமைக்கு அரசாங்கத்தின் தவறான கொள்கைகளே காரணம் என குற்றம் சாட்டினார்.
விவசாயிகளின் உரிமைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்றும், ஒரு கிலோ நெல்லுக்கு குறைந்தபட்சம் 120 ரூபாய் உத்தரவாத விலை கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.