உப்பு நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை அம்மனின் தீர்த்தம் எடுக்கும் உற்சவம்! (Photos)
ஈழத்தின் பிரசித்தி பெற்ற உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தீர்த்தம் எடுத்தல் உற்சவம் நேற்று மாலை முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் சிறப்பாக இடம்பெற்றது.
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று வருடங்களின் பின்னர் இம்முறை ஆயிரக்கணக்கான அடியவர்கள் இந்த உற்சவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 30 ஆம் திகதி பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியிருந்தது.
தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு விளக்கு எரிப்பதற்கான உப்பு நீரிணை கடலிலே பெற்றுக் கொள்கின்ற அரிய நிகழ்வு இடம்பெற்று இருந்தது.
அந்த வகையில் நேற்று மாலை முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தீர்த்தக்குடம் பாரம்பரிய முறைப்படி பறை வாத்தியம் முழங்க அடியவர்கள் புடைசூழ முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டது.
நள்ளிரவு உப்பு நீரில் விளக்கேற்றும் அரிய காட்சி இடம்பெறுவதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலையில் காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து மடைப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

