இலங்கையில் பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
நாட்டில் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை குறைந்துள்ளதாக இலங்கை சமூக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக பிறப்பு குறைபாடுகள் தினத்தை முன்னிட்டு கொழும்பு மருத்துவ சங்க மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய கொழும்பு மருத்துவ சங்கத்தின் தலைவர் நிபுணர் டாக்டர் கபில ஜெயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
பிறப்பு எண்ணிக்கை
2023 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தோராயமாக மூன்று லட்சத்து நாற்பதாயிரம் நேரடி பிறப்புகள் நடந்துள்ளன, 2024 ஆம் ஆண்டில், இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் நேரடிப் பிரசவங்களே நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிறப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் வரை பிறப்பு குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பதிவாவதாகவும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் மரபணு மாற்றங்கள் மற்றும் தாயின் சரியான ஊட்டச்சத்து இல்லாமை போன்ற காரணிகள் பிறப்பு குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒரு குழந்தையை கருத்தரிப்பதற்கு முன்பு, தாய் தனக்கு ஏற்படக்கூடிய ஏதேனும் சிக்கல்கள் குறித்து விழிப்புடன் இருப்பதும், பொருத்தமான பரிசோதனைகளை மேற்கொள்வதும் முக்கியம் என்று சிறப்பு மருத்துவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.