கண்ணீர்விடும் முன்னாள் போராளி; கண்டுகொள்வார்களா புலம்பெயர் தமிழர்கள்!!
இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டுகால கொடூர யுத்தத்தினால் தமிழர் தாயக பகுதிகளில் பலர் மரணித்தனர் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர் இன்னும் பலர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலை காணப்படுகிறது.
ஆனாலும், யுத்தத்தின் வடுக்களினாலும், நேரடியாக யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் மாற்றுத்திறனாளிகளாக எம் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது 14 வயதில் ஆயுதம் ஏந்தி போராடி, தற்போது மாற்றுத்திறனாளியாகியுள்ள 'சிலுவைராசா' என அழைக்கப்படும் தமிழ் கீதனின் தற்போதைய நிலை கண்னீரை வரவழைக்கின்றது.
யாழ் செல்லும் படையணி
மன்னார், விடத்தல் தீவு பகுதியை சேர்ந்த தமிழ் கீதன் 'யாழ் செல்லும் படையணியை' சேர்ந்த முன்னாள் போராளி ஆவார். மாங்குள யுத்தம், ஓயாத அலைகள் போன்ற சமர்களில் கலந்துகொண்ட இவர் , தற்போது தோட்டவெளி ஜோசேவாஸ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்க வீட்டுத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வீடொன்றில் வாழ்ந்து வருகிறார்.
1999ஆம் ஆண்டில் ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது தனது ஒரு காலின் பாதத்தை முழுவதுமாக இழந்த நிலையில் தமிழ் கீதன் மாற்றுத்திறனாளியானார். இந்நிலையில் தனது 3 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தை பராமரிப்பதற்காக தனக்கு கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருகிறார்.
இவரின் மனைவி தனியார் நிறுவனமொன்றில் சிறிய சம்பளத்துக்காக சுத்திகரிப்பு பணியாளராக வேலை செய்து வருகின்றார். இத்தகைய துன்பகரமான நிலையிலேயே தமிழ் கீதனின் மூத்த மகள் உயர்தரத்தில் கல்வி பயில்கிறார். ஒரு மகன் விபத்தொன்றினால் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவரும் மாற்றுத்திறனாளியாக மாறியுள்ளார்.
புலம்பெயர் உறவுகளிடம் விடுத்த கோரிக்கை
அதோடு இளைய மகனும் பார்வையற்ற குழந்தையாகவே பிறந்துள்ளமை அந்த குடும்பத்தின் பேரவலமாக காணப்படுகிறது. இவ்வாறு தானும், தனது இரு மாற்றுத்திறனாளி பிள்ளைகளும் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் அன்றாடம் தவித்து வருவதாக தமிழ் கீதன் தெரிவித்துள்ளார்.
தனது மகனின் பார்வைக்காக தன்னிடம் இருந்த படகு மற்றும் இதர சொத்துக்களை விற்று சிகிச்சை மேற்கொண்டும், எந்த பலனும் கிடைக்கவில்லை. மகனின் கண்களை விழித்திரை மறைப்பதால் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில், அவ்விழித்திரையை சரி செய்யும் சிகிச்சையை மேற்கொள்ள வசதியின்றி துன்புற்று வருகிறார்.
இந்நிலையில் தனக்கு ஆடம்பர உதவிகளை செய்யாவிட்டால் கூட வாழ்வாதாரத்தை முன்னேற்றும் சிறு உதவிகளையேனும் புலம்பெயர் உறவுகள் வழங்க முன்வந்தால், தன் குடும்பத்தையும் மகனின் சிகிச்சையையும் கொண்டு நடத்த உதவியாக இருக்கும் என அவர் கோரியுள்ளார்.
அதேவேளை , நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் செலவு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் இவரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.