வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த கொடுமை; நீதிமன்றம் விடுத்த உத்தவு
சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றை எரித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 42, 48 மற்றும் 50 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

சித்திரவதைக்கு உள்ளான காட்டு யானை
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்த காட்டு யானையை நெருப்பால் எரித்து சித்திரவதை செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியிருந்தது.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மூன்று சந்தேகநபர்கள் மிகிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சித்திரவதைக்கு உள்ளான காட்டு யானை சீப்புக்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
யானையின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்ட மரண பரிசோதனையில், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் ஏற்பட்ட நோய் நிலைமை மற்றும் தீ வைக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி ஆகிய காரணங்களால் மரணம் சம்பவித்துள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.