தேடுவாரற்றுக் கிடந்த பாதணி மற்றும் ஸ்மாட் போன்; நீர்தேக்கத்தில் இளைஞனின் சடலம்
நோர்வூட்- நிவ்வெளிகம காசல்ரீ நீர்தேக்கத்திற்கருகில் இன்றுகாலை தேடுவாரற்றுக் கிடந்த பாதணியும் மற்றும் ஸ்மாட் போன் காணப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் நீர்த்தேக்கத்தில் இருந்து இளைஞனின் சடலம் ஒன்று, மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மாலை 3 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . சடலமாக மீட்கப்பட்ட நபர் நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்ததை சேர்ந்த 20வயதுடைய சரத்குமார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இளைஞனின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம -காசல்ரீநீர்தேக்கத்தின் அருகாமையில் ஆண் ஒருவரினது, ஒரு ஜோடி பாதணியும் ஸ்மாட் போன் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொருள்கள் இன்று காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நிவ்வெளிகம பிரதேசத்தைச் சேர்ந்த, இரண்டு சிறுமிகள் முகம் கழுவதற்காக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் சென்ற போது, குறித்த பொருள்களைக் கண்ட சிறுமிகள், அது குறித்து கொழும்பிலுள்ள தமது தந்தைக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தந்தை, தொலைபேசி ஊடாக நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த பொலிஸார், காசல்ரீ நீர்தேக்கத்தில் தேடும் பணியை முன்னெடுத்த போதே, குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.