தமிழர் பகுதியில் இ.போ.ச சாரதியின் மோசமான செயல் ; நடுக்காட்டில் தவித்த ஆசிரியர்
ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற பேருந்து மீது குறித்த ஆசிரியர் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை - யாழ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான BN NC 1554 இலக்கமுடைய பேருந்து வண்டியில் பயணித்த கஷ்டப்பிரதேச பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவருக்கே இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குறித்த ஆசிரியர் தெரிவிக்கையில், நேற்றைய தினம் (12) மட்டக்களப்பு எல்லைக் கிரமமப்புற பாடசாலையான ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்திலிருந்து ஓட்டமாவடிக்கு வருவதற்காக மேற்படி இலக்கமுடைய பேருந்து வண்டியில் பயணித்த சமயம் இடைநடுவே என்னுடைய பிரயாணப்பை பேரூந்திலிருந்து தவறி விழுந்து விட்டது.
அதை நன்கு அவதானித்த சாரதி பேரூந்தை நிறுத்தி என்னுடைய பையை எடுத்து வரும் வரையில் காத்து நிற்பதாகச்சொன்னார். நான் அந்தப்பையை எடுக்கச்சென்றதும் யானைகள் நடமாட்டமுள்ள காட்டுக்குள் என்னை தன்னந்தனியே விட்டுச்சென்று விட்டார்.
உயிருக்கு உத்தரவாதமில்லாத அந்த நடுக்காட்டில் கொழுத்தும் வெயிலில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அச்சத்தோடு காத்திருந்து ஓட்டமாவடி வந்தடையும் துப்பார்க்கிய நிலை ஏற்பட்டது.
அதிக பேருந்து வண்டிகள் பயணத்தில் ஈடுபடாத இப்பாதையில் அரச பேருந்துகளை நம்பி பயணித்து கஷ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு கற்பிக்கச் செல்கின்ற ஆசிரியரான எனக்கே இவ்வாறான நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்?.
இவ்வாறான மோசமான செயல்களில் ஈடுபடும் ஒரு சில சாரதி, நடத்துனர்களால் ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் அவப்பெயர் ஏற்படுவதுடன், அரச பேரூந்துகளை நம்பி பயணிக்கும் அரச ஊழியர்கள், பொது மக்களுக்கும் அசெளகரியங்கள், நம்பிக்கையீனங்களும் ஏற்படுகின்றது எனத்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தவிடயம் தொடர்பில் இ.போ.சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.