கை, கால்கள் கட்டப்பட்டு....பயணப் பையிலிருந்த பெண்ணின் சடலம்; தீவிர விசாரணையில் இறங்கிய பொலிஸார்!
சப்புகஸ்கந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடமொன்றில், கைவிடப்பட்டிருந்த பயணப் பையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பிலான தீவிர விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பயணப் பைக்குள் இடப்பட்டிருந்த இந்த சடலம் சுமார் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட பெண்ணினுடையது என பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் நேற்று மாலைவரை சடலமாக மீட்ப்பட்டவர் யார் என அடையாளம் காணப்படவில்லை என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாபிம பகுதியை அண்மித்து, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வீதியிக்கு அருகே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வந்த நிலையில், அது தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவுக்கு பிரதேசவாசிகள் பலரும் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்தே நேற்று நண்பகல் அப்பகுதிக்கு பொலிஸார் சென்று நிலைமையை ஆராய்ந்தனர்.
இதன்போது கொட்டப்பட்டிருந்த குப்பையில் சந்தேகத்துக்கு இடமான முறையில், பயணப் பை ஒன்று, பிளாஸ்டிக் பாய் ஒன்றினால் சுற்றப்பட்டு அவ்விடத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் , அதிலிருந்து துர்வாடை வீசியுள்ளது.
இதனையடுத்து அந்த பயணப் பை சோதனையிடப்பட்ட நிலையில், குறித்த பைக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சிவப்பு சட்டை ( கவுன்) அணிந்த பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.
எனினும் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதனால் உடனடியாக சடலத்தை பொலிசாரால் அடையாளம் காண முடியவில்லை.
இந் நிலையில் நேற்று மாலை அந்த பகுதிக்கு மஹர பதில் நீதிவான் ரமனி சிறிவர்தன வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசலைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைக்கு அமைய, சப்புகஸ்கந்த பொலிஸாரும், களனி வலய குற்றத் தடுப்புப் பிரிவினரும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
பயணப் பொதியில் பெண்ணின் சடலம்? பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!