தலிபான் வெற்றியால் சரிந்த ஜோ பைடனின் மக்கள் செல்வாக்கு...பயணத்தை தொடங்கிய கமலா ஹாரிஸ்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளுக்கு தனது அரசு முறை பயணத்தை தொடங்கி உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வேகமாக வெளியேறியதும், அங்கு தாலிபான்கள் வெற்றிபெற்றதும் சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பியது. அமெரிக்காவிற்கு எதிராக பல்வேறு நாடுகள் கடும் விமர்சனங்களை வைத்தது. இந்த நிலையில்தான் கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகள் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெற்றி சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் வெற்றியாக கருதப்படுகிறது.
ஆசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் சீனா, ரஷ்யாவின் ஆதிக்கத்தை மேலும் நிலைநாட்டும் வகையில் ஆப்கானிஸ்தான் அரசியல் மாற்றம் உருவெடுத்துள்ளது. இந்த நிலையில்தான் ஆசிய நாடுகளுக்கு இடையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கமலா ஹாரிஸ் இந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.
ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது. முக்கியமாக தென் சீன கடல் எல்லையை பங்கு போடும் நாடுகளை சீன மோசமாக நடத்தி வரும் நிலையில்தான் கமலா ஹாரிஸின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. கமலா ஹாரிஸ் இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண். இவருக்கு ஆசிய அரசியல் அத்துப்படி. அதோடு ஆசிய பெண் என்பதால் தற்போது அமெரிக்க துணை அதிபராக இவரின் ஆசிய பயணம் அதிக கவனம் பெறுகிறது.
கமலா ஹாரிஸ் இந்த பயணத்தில் சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். ஆனால் இவர் இந்தியாவிற்கு வர மாட்டார். இந்த சந்திப்பில் சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு கமலா ஹாரிஸ் செல்ல முக்கிய காரணம் உள்ளது. மூன்று முக்கியமான விஷயங்களை மையமாக வைத்து கமலா ஹாரிஸின் இந்த பயணம் அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது. முதல் விஷயம் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் வாங்கினாலும், நாங்கள் இன்னும் ஆசியாவில் வலுவான சக்தி கொண்டுதான் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக கமலா ஹாரிஸ் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
ஆசியாவில் இருக்கும் அமெரிக்காவின் நட்பு நாடுகளை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். அவர்களுக்கு தொடர்ந்து எங்களின் ஆதரவு இருக்கும் என்பதை நிலை நாட்டுவதற்காக கமலா ஹாரிஸின் இந்த பயணம் அமைந்து உள்ளது என்கிறார்கள். அடுத்ததாக, இந்த இரண்டு நாடுகளும் தென் சீன கடல் எல்லை பகிர்வில் சீனாவுடன் கடும் மோதலில் உள்ளது. இதனால் இந்த இரண்டு நாடுகளுக்கு உத்வேகம் கொடுக்கும் விதமாகவும், நம்பிக்கை கொடுக்கும் விதமாகவும் கமலா ஹாரிஸ் இந்த பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
தென் சீன கடல் எல்லை பிரச்சனையில் உங்களை நாங்கள் கைவிடவில்லை என்று நம்பிக்கை கொடுக்கும் விதமாக கமலா ஹாரிஸ் இந்த பயணத்தை செய்துள்ளார். அதிலும் கம்யூனிச நாடான வியட்நாமிற்கு கமலா ஹாரிஸ் செல்வது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இதற்கு முன் ஆப்கானிஸ்தான் போலவே வியட்நாமில் அமெரிக்க படைகள் வெளியேறியது. 1975ல் வியட்நாமில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், ஆப்கானிஸ்தானில் இருந்து 2021ல் படைகள் வெளியேறியது ஒரே மாதிரி இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இப்படிப்பட்ட நிலையில் வியட்நாமிற்கு கமலா ஹாரிஸ் செல்ல இருக்கிறார்.
சீனாவிற்கு எதிரான வியட்நாம் எல்லை மோதல் காரணமாக இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை பிடிக்கும் முன்பே கமலா ஹாரிஸின் இந்த பயணம் திட்டமிடப்பட்டு விட்டாலும், இப்போது இதில் கூடுதல் குறிக்கோள்கள் சேர்க்கப்பட்டு பல முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தெற்கு ஆசியாவில் இருக்கும் 8 முதல் 10 நாடுகளின் ஆதரவை பெறும் திட்டத்தில் கமலா ஹாரிஸின் இந்த முதல் கட்ட பயணம் அமைந்துள்ளது.
ஏற்கனவே ப்ருனோய், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு தென் சீன கடல் எல்லை மோதலில் அமெரிக்கா ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தில் கமலா ஹாரிஸ் சிங்கப்பூரின் சாங்கி கடல்படை தளத்தில் உள்ள அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் துல்சா கடற்படை கப்பலில் உள்ள அமெரிக்க வீரர்களிடம் பேச இருக்கிறார். அமெரிக்க கடற்படை கப்பல்கள் தென் சீன கடல் எல்லையில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக சீனாவிற்கு எதிராக காய் நகர்த்தி வரும் நிலையில் கமலா ஹாரிஸின் இந்த உரை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
அதோடு தாலிபான்களின் ஆப்கானிஸ்தான் வெற்றியால் அதிபர் பிடனின் செல்வாக்கு உள் நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. அதிபர் பைடனுக்கு மக்கள் ஆதரவு கடந்த கருத்து கணிப்பில் 53 ஆக இருந்தது. ஆனால் இந்த முறை அவருக்கான ஆதரவு 7 சதவிகிதம் குறைந்துள்ளது.
அவருக்கு தற்போது மக்கள் ஆதரவு 46 சதவிகிதம் மட்டுமே உள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது அவருக்கான approval rating சரிவிற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. மாறாக துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு 43 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. அதிபர் பைடனை விட இவருக்கான ஆதரவு 3 சதவிகிதம் குறைவாக இருந்தாலும் தனிப்பட்ட வகையில் இவருக்கான ஆதரவு உயர்ந்து இருக்கிறது.
முக்கியமாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபராக பதவி ஏற்றால் நன்றாக இருக்கும் என்று அமெரிக்கர்கள் சிலர் கருத தொடங்கி உள்ள நிலையில்தான் தற்போது கமலா ஹாரிஸ் ஆசிய பயணத்தை தொடங்கி உள்ளார். சர்வதேச அளவில் இவர் பெரிய தலைவராக உருவெடுக்கும் சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வருகிறது.