திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனை கட்டாயம் ; சுகாதார அமைச்சு அவசர வேண்டுகோள்!
இலங்கையில் தற்போது சுமார் 2,500 தலசீமியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், ஆண்டுதோறும் 45 முதல் 60 வரையான குழந்தைகள் தலசீமியாவின் கடுமையான பாதிப்புடன் பிறக்கின்றனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சிரினி அலஹப்பெரும இந்த தகவல்களை வெளியிட்டார்.

தலசீமியா நோய் பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் தலசீமியாவுடன் பிறக்கும் குழந்தைகளின் வருடாந்த எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
தலசீமியா என்பது தொற்றுநோய் அல்ல என்றும், இது பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு மரபணு வழியாக பரவும் நோயாகும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
இதனால், திருமணத்திற்கு முன்பாக தலசீமியா பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, குருநாகல், அனுராதபுரம், ராகம, மட்டக்களப்பு உள்ளிட்ட அதிக பாதிப்பு பதிவாகியுள்ள ஆறு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களை அடையாளம் காணும் விசேட பரிசோதனைத் திட்டங்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், தலசீமியா நோயாளர்களுக்குத் தேவையான குருதி மாற்றீடு மற்றும் மருந்துகள் அனைத்தும் அரசாங்க மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.