தையிட்டி வீதி ;பொலிஸார் வழக்கு தள்ளுபடி
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையிலுள்ள பவானி வீதி தொடர்பில் பலாலி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீதியில் ஏற்படுத்தப்பட்ட தடையைத் தொடர்பாக பிரதேச சபையினால் வெளியிடப்பட்ட அறிவித்தல், சமாதான சீர்குலைவை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டு கடந்த மே மாதம் 10ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த வழக்கில் சமாதான குலைவை ஏற்படுத்தியதற்கான போதுமான ஆதாரங்களை வழக்குத் தொடர்ந்த தரப்பு முன்வைக்கவில்லை என நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.