தாய்லாந்து வழங்கிய யானைகள் ஆரோக்கியமாக உள்ளன ; சுற்றாடல் அமைச்சர்
தாய்லாந்து அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு யானைகளின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக சுற்றாடல் அமைச்சு இன்று (19) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த யானைகள் துன்புறுத்தப்படுவதாக தாய்லாந்து அரசாங்கம் குற்றம் சாட்டியதை அடுத்து, அவற்றின் உடல்நிலையை ஆய்வு செய்ய விசேட கால்நடை வைத்திய அதிகாரிகள் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

சிறப்பான உடல்நிலை
இந்த குழுவின் அறிக்கை நேற்று (18) தனக்கு கிடைக்கப் பெற்றதாகவும், அதன்படி இரண்டு யானைகளின் ஆரோக்கியமும் நல்ல நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்தார்.
தற்போது தலதா மாளிகையில் 'தாய் ராஜா' (விஜய ராஜா) என்ற பெயரிலும், களனி ரஜ மகா விகாரையில் 'கண்டுல' என்ற பெயரிலும் இருக்கும் இந்த யானைகளை மீண்டும் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்வது குறித்து அடுத்தகட்ட இராஜதந்திர முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த அறிக்கை தாய்லாந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், அந்த நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சர் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு வர உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.