பெருமளவு போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பிரஜைகள் கைது
கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவு போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் சுமார் ரூ.5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருட்களுடன் இரு தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வந்த 23 மற்றும் 39 வயதுடைய தாய்லாந்து பிரஜைகள்
தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இன்று (08) விமானம் மூலம் இலங்கை வந்த 23 மற்றும் 39 வயதுடைய இருவரும், விமான நிலைய வருகை முனையத்தின் ‘கிரீன் சேனல்’ ஊடாக போதைப்பொருட்களை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது இரண்டு பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, 16 விட்டமின் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், கறுப்பு திராட்சைத் துகள்கள் போன்று தோற்றமளிக்கும் வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 641 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.