மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; சவூதி விமான நிலையங்கள் மீது ஹூதி தாக்குதல்
சவூதி அரேபியாவின் அபா மற்றும் ரியாத் விமான நிலையங்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தனித்தனி தாக்குதல்களில் மூன்று பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், 36 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய் மற்றும் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் அபா சர்வதேச விமான நிலையத்தில் மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன், 28 பேர் காயமடைந்தனர்.

ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை
ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன், எட்டு பேர் காயமடைந்தனர்.
தாக்குதல்களைத் தொடர்ந்து சேதங்களை மதிப்பீடு செய்து, பயணிகள் மற்றும் விமான நிலைய பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சவூதி பொது சிவில் விமானப் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்து அழித்ததாக சவூதி தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது.
மேலும், ஏமன் தலைநகர் சனாவில் இருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுதளமும் அழிக்கப்பட்டதாக அந்தப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.