அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளி துமளி
நேற்றைய தினம் இடம் பெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு (DCC) கூட்டத்துக்கான அட்டவணையில் திருக்கோவில் பிரதேசத்துக்குட்பட்ட வட்டமடு மேச்சல் தரையில் 1186 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவினால் முன்மொழியப்பட்ட விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.
நீதிமன்றத்தில் வட்டமடு மேச்சல்தரை வழக்கு உள்ள நிலையில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என்பதை தெளிவுபடுத்தியதுடன் இவ்வாறான முன்மொழிவு தொடர்பில் பிரதேச மட்டத்தில் உள்ள சமூக அமைப்புகளின் கலந்துரையாடலின் பின்னரே முடிவுகள் எட்டப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
வாதிப்பிரதிவாதங்கள்
அத்துடன் பொத்துவிலுக்கென தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பொத்துவில் மற்றும் - உகன கல்வி வலயங்கள் அமைப்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவில் இன ரீதியாகவும் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு எதிராகவும் இடம்பெற இருக்கின்ற இச்செயற்பாட்டுக்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரனால் எதிர்ப்பினை தெரிவிக்கப்பட்டதுடன் வாதிப்பிரதிவாதங்களும் இடம்பெற்றது.
பொத்துவில் கல்வி வலயத்தை உருவாக்குவதற்கென திருக்கோவில் கல்வி வலயத்திலிருந்து 08 பாடசாலைகளை உள்வாங்குவதற்கான கருத்துகள் உருவாகிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரனின் வாதப்பிரதிவாதங்கள் எதிர்ப்பின் மத்தியில் தீர்மானம் எட்டப்படாது முடிவுற்றிருந்தது.