6வது நாளாகவும் தொடரும் பதற்றம்; 70 க்கும் மேற்பட்ட உக்ரேனிய படையினர் பலி; 40 மைல் நீளத்துக்கு அணிவகுத்த ரஷ்ய டாங்கிகள்
உக்ரைன் - ரஷ்யா இடையே 6வது நாளாக போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் ஒக்திர்கா நகரில் உள்ள ராணுவ தளத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் 1 ம் திகதி, நள்ளிரவு தொடக்கம் உக்ரேனின் SUMY பிராந்தியத்தில் உள்ள, Okhtyrka எனும் சிறுநகர் மீது, கடுமையான மல்டிபெரல் தாக்குதலை ரஷ்யப்படைகள் மேற்கொண்டு வருகின்றன.
இதில் 70 க்கும் மேற்பட்ட உக்ரேனியப் படைகள் கொல்லப்பட்டதாகவும், நகரம் முற்றிலும் சிதைத்து அழிக்கப்பட்டுள்ளதாகவும், SUMY பிராந்திய இராணுவப் பொறுப்பாளர் Dmytro Zhyvytskyy தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நேரம் நள்ளிரவு 1 மணியளவில் முகநூல் நேரலையில் வந்த அவர், இந்தத் தகவல்களை வெளியிட்டார். Grad multiple launch rocket systems எனப்படும் பல்குழல் பீரங்கிகள் மூலம் ரஷ்ய இராணுவம் தாக்கியுள்ளதாக கூறினார்.
அதேவேளை உக்ரேனின் சகல பகுதிகளிலும் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. தலைநகர் கீவ் நோக்கி, பெருந்தொகை இராணுவத்தினரையும் போர் தளபாடங்களையும் அது நகர்த்தியுள்ளது.
சுமார் 65 கிலோமீட்டர் ( 40 மைல் ) நீளத்துக்கு ரஷ்ய டாங்கிகள் அணிவகுத்துச் சென்றதை சட்டலைட் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் காண்பித்தன.

