தமிழர் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தை அபகரிக்க முயற்சித்த தனிநபரால் கடும் பதற்றம்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அப்பகுதி முச்சக்கரவண்டி உரிமையாளர்களும், பேருந்து உயிமையாளர்களும் தமது முச்சக்கரவண்டிகள் மற்றும் பேருந்துகளை தரித்துவைப்பதற்கு நீண்டகாலமாகப் பயன்படுத்திவந்த தரிப்பிடப் பகுதியை, தனிநபர் ஒருவர் வேலியிட்டு அத்துமீறி அபகரிக்கும் முயற்சி மேற்கொண்டதால் அப்பகுதியில் நேற்று (04) பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு அப்பகுதி பேருந்து உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தகசங்கம் ஆகிய தரப்பினர் முறையிட்டிருந்ததையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார்.
வேலியிட்டு அபகரிக்கும் முயற்சி
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள பகுதியை அப்பகுதி பேருந்துஉரிமையாளர்களும், முச்சக்கரவண்டி உரிமையாளர்களும் நீண்டகாலமாக தரிப்பிடமாகப் பயன்படுத்திவந்துள்ளனர். அத்தோடு குறித்த தரிப்பிடப்பகுதியிலிருந்தே முறிகண்டி பரந்தன் பேருந்துசேவையும் இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில் முறிகண்டிப்பாடசாலையில் கல்விகற்கும் பெருமளவான மாணவர்கள் குறித்த பரந்தன் முறிகண்டி பேருந்தைப் பயன்படுத்தி வருவதாகவும், குறித்த தரிப்பிடம் மாணவர்களை பேருந்தில் ஏற்றி இறக்குவதற்கு பாதுகாப்பான இடமெனவும் அப்பகுதி மக்களாலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதேவேளை குறித்த பேருந்து மற்றும் முச்சக்கரவண்டித் தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள அரசகாணியில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகத்திடமிருந்து குத்தகை அடிப்படையில் பெற்று உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த உணவகத்தினை தற்போது நடாத்திவரும் நபராலேயே முச்சக்கரவண்டி மற்றும் பேருந்து தரிப்பிடப்பகுதிக்கு வேலியிட்டு அபகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த பகுதியில் உணவகத்தினை நடாத்திவரும் குறித்த நபர் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களைச் சீண்டும்விதமான வார்த்தைப் பிரயோகத்தை வெளிப்படுத்தியநிலையில் அப்பகுதியில் சிறிது நேரம் முறுகல் நிலை தோன்றியது.
குறித்த முறுகல் நிலையினையடுத்து அப்பகுதிக்கு வருகைதந்த மாங்குளம் பொலிசார் இருதரப்பினரையும் மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்திருந்தனர். அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பேருந்து உரிமையார்கள் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் அனைவரும் பேருந்தில் மாங்குளம் பொலிஸ் நிலயத்திற்குச் சென்றனர்.
அதற்கமைய இருதரப்பினரையும் மாங்குளம் பொலிசார் அழைத்து விசாரணைமேற்கொண்டனர். இந்நிலையில் எதிர்வரும் திங்களன்று ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளரின் பங்குபற்றுதலுடன் இவ்வாறு அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள வேலியினை அப்புறப்படுத்துவதாக சுமூக முடிவுவெட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.