பத்து வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை
பத்து வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இராணுவ வீரருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்க , மொனராகலை மேல் நீதிமன்ற நீதவான் நலிந்த ஹேவாவசம் கடந்த வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டார்.
தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 33 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கே இவ்வாறு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தாயார் பொலிஸில் முறைப்பாடு
கடந்த 2021 ஆம் ஆண்டு நான்காம் மாதம் கிரிக்கெட் விளையாடுவதற்காக வந்த சிறுவனை குறித்த இராணுவ வீரர் அருகிலுள்ள முன்பள்ளி கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று, கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சிறுவன் தனது தாயிடம் கூறியதையடுத்து தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய உடனடியாக செயல்பட்ட படல்கும்புரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுனில் திஸாநாயக்க , சந்தேக நபரை கைது செய்து பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
அதற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் நீண்ட கால வழக்கு விசாரணைக்கு பின்னர் இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
முதல் குற்றச்சாட்டுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதத்துடன் ஐந்து வருட சிறை தண்டனையும், இரண்டாவது குற்றச்சாட்டுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும், பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
அதோடு பணத்தை செலுத்தவில்லை என்றால், தலா ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டவருக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்தாவிட்டால் மேலதிகமாக இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதித்துள்ளார்.