பொய் சாட்சியம் வழங்க பத்தாயிரம் ரூபா இலஞ்சம்!
குளியாபிட்டி மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்று தொடர்பில் பொய் சாட்சியம் வழங்குவதற்காக பத்தாயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற உப பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (20) கைது செய்துள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிஉல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவு ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் பொய் சாட்சியம் வழங்குவதற்காக பத்தாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுள்ளார்.
உப பொலிஸ் பரிசோதகர் கைது
தற்போது கொழும்பு பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிஉல்ல பொலிஸ் பிரிவின் கீழ் முன்னர் கடமையாற்றிய சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர், ஒரு தரப்பினருக்கு ஆதரவாக சாட்சியமளிப்பதற்காக பத்தாயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைதான சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் குளியாபிட்டிய நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.