பத்து புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விரைவில் நியமனம்!
அமைச்சரவையில் பத்து புதிய அமைச்சர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க (S.B. Dissanayake) தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.
அநேகமாக மார்ச் மாதத்தில் புதிய நியமனங்கள் அறிவிக்கப்படும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனக பண்டார, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, காமினி லோககே, சரத் வீரசேகர, எஸ்.எம். சந்திரசேன, சி.பி. ரத்நாயக்க பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதிக்கு முன்மொழியப்பட்ட பெயர் பட்டியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
குறித்த பட்டியல் ஏற்கனவே உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.