முல்லைத்தீவில் ஆலய கணக்கு கேட்டவர்கள் வீடுகளிற்கு கல்லெறி!
முல்லைத்தீவில் , ஆலய கட்டிட கணக்கு வழக்குகளை கேட்டவர்களை இளஞர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நாடாத்தியதுடன் தகாத வார்த்தைகளினால் மிரட்டி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று அளம்பில் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
அளம்பில் கிராம புனித அந்தோனியார் ஆலய கட்டிட பணி முடிவுற்று திறப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. அதற்கு பின்னர் கட்டிட கணக்கறிக்கையில் குளறுபடி இருப்பதாக பலர் சுட்டியபோதும் அதற்கு முறையான விளக்கமளிக்கப்படவில்லை. அதன்பின்னர், அப்போதைய பங்குதந்தை இடமாற்றலாகி சென்றார். புதிய பங்குத்தந்தை வந்த போதும் அவரிடமும் கட்டிட கணக்கறிக்கை கோரிய போதும் கணக்கறிக்கை சமர்பிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் , “எங்களுக்கும் கணக்கறிக்கை தொடர்பாக எந்த துண்டுகூட தரவில்லை. ஒவ்வொரு பூசையிலும் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டதாக சொல்லுகிறார்கள். அந்த கணக்கறிக்கை எங்கே? எமது ஆலயத்துக்கு வங்கி கணக்கு உண்டு. சில பணங்கள் தனிநபர் வங்கி கணக்கிலும் நேரடியாக வைப்பில் இடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
எதுவாக இருப்பினும் வங்கி கூற்றினையும் செலவு செய்த பற்று சீட்டுகளையும் மக்களுக்கு முன்பாக சரி பார்க்க வேண்டும் பிரதேச வாசியொருவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், முகநூல் ஒன்றின் ஊடாக குறித்த கணக்கறிக்கை தொடர்பாக , அப்போதைய பங்குத்தந்தை, கட்டிட கணக்கு விவகாரங்களுடன் தொடர்புபட்டிருந்த கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஆகியோரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இந்த பின்னணியில் நேற்று இரவு சுமார் 50 க்கு மேற்பட்ட இளைஞர்கள் 5 வீடுகளுக்கு சென்று இனி கணக்கறிக்கை கேட்கக்கூடாது என்றும் , கேட்டால் என்ன நடக்கும் தெரியும் தானே என கேட்டு, வீடுகளிற்கு கற்களால் எறிந்து மிரட்டி உள்ளனர். இவ்வாறு ரௌடித்தனத்தில் ஈடுபட்டவர்களில் பெருமானோர் பாடசாலை மாணவர்கள் என கூறப்படுகின்றது.
இதன்போது அளம்பில் இராணுவத்தினர் சம்பவம் தொடர்பில் அறிந்து அங்கு சென்றவேளை அடாவடி செய்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிஓடியுள்ளனர்.
இந்த நிலையில், இவ் கணக்கறிக்கை தொடர்பாக ஆயர் இல்லம் உடன் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும், தாக்குதலுடன் தொடர்புடையோரை கைது செய்து நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்பதுடன் பாடசாலை மாணவர்களை இவ்வாறு ஏவிவிட்டவர்களையும் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இளைஞர்களை கொண்டு ஆவா குழுக்களை உருவாக்கவா இந்த முயற்சி எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளனர்.