இலங்கையில் விமானியின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்ட பாரிய விமான விபத்து ; தப்பிய 212 பயணிகள்
புதிய இணைப்பு: தொழில்நுட்பக் கோளாறால் சிலாபத்திற்கு மேலே 2 மணி நேரம் சுற்றிய துருக்கிய ஏர்லைன்ஸ் கொழும்பு-இஸ்தான்புல் விமானம் TK733, பாதுகாப்பாக கொழும்பு விமான நிலையத்தில் இல் பாதுகாப்பாக தரையிறங்கியது.
விமானியின் சாமர்த்தியமான நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக, சிலாபம் கடல் பகுதிக்கு மேலே விமானம் வட்டமடிக்கச் செய்யப்பட்டது.

விமானியின் நிதானம்
வானிலேயே வைத்துப் பெருமளவு எரிபொருள் கடலில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது. இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் முழு அவசரக்கால எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஓடுதளத்தைச் சுற்றி தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, எடையைக் குறைத்துக்கொண்ட அந்த விமானம் நள்ளிரவில் மிகவும் லாவகமாகப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

விமானத்தில் இருந்த 202 பயணிகள் மற்றும் 10 பணிக்குழுவினர் என யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. தக்க நேரத்தில் செயல்பட்ட விமானியின் நிதானமும், தரைக் கட்டுப்பாட்டு அறையின் துரித நடவடிக்கையும் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பாதுகாத்துள்ளன.
முதல் இணைப்பு : கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்கவிலேயே அவசரமாகத் தரையிறங்க முயற்சித்து வருகின்றது.
விமானத்தின் தரையிறங்கும் சக்கரப் பகுதியில் (Landing Gear) ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த விமானம், எரிபொருளைக் குறைப்பதற்காக விமான நிலையத்திற்கு மேலேயுள்ள வான்பரப்பில் வட்டமிட்டுக்கொண்டிருப்பதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக எரிபொருளுடன் அவசரமாக தரையிறக்கும் போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்ப்பதற்காகவே, எரிபொருளை தீர்க்கும் முயற்சியில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.