நள்ளிரவில் திடீரென பற்றி எரிந்த தொழிற்சாலை !
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி, லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மஸ்கெலியா லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் நவீன முறையில் 1968 ல் கட்டப்பட்ட தேயிலை தொழிற்சாலை நள்ளிரவு சுமார் 12.15 மணியளவில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது என அத் தோட்டத்தில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
தீயை அணைக்க தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நல்லதண்ணி பொலிஸ், அதிரடி படையினர் முன் வந்த போதும் தீயை அணைக்க முடியவில்லை எனவும், தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது என தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பரவிய தீ, ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
தேயிலை தூள் உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட தீ, தேயிலை இலைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சேமிப்பு அறைக்கும் பரவியதாகவும், பொட்டலம் கட்டப்பட்ட தேயிலைத் தூளும் பெருமளவில் எரிந்து நாசமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், தோட்ட நிர்வாகம் திட்டமிட்டு தீயை மூட்டியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.