5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளுக்கு வரி எச்சரிக்கை!
காணிகள், சொத்துகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களில் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு முறைகளுக்கு மாறாகப் பணமாகச் செலுத்தினால், அதிக வரிப் பொறுப்பை எதிர்கொள்ள நேரிடும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு முறைகளைப் பயன்படுத்தாமல் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையைப் பணமாகச் செலுத்தி மேற்கொள்ளப்படும் வணிகச் செலவுகள், வரிக்குட்பட்ட வருமானத்தைக் கணக்கிடும்போது செலவுக் கழிவாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, ஒரு நிறுவனம் 10 இலட்சம் ரூபாவைச் செலவாகப் பணமாகச் செலுத்தினால், அதனை வரிக் கழிவாகக் கோர முடியாது. இதனால் வரிக்குட்பட்ட இலாபம் 10 இலட்சம் ரூபாவால் அதிகரிப்பதுடன், 30 சதவீத வரி வீதத்தின் அடிப்படையில் மேலதிகமாக 3 இலட்சம் ரூபா வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
காணி மற்றும் சொத்துப் பரிவர்த்தனைகளிலும் இதே கட்டுப்பாடு பொருந்தும். ஒருவர் 90 இலட்சம் ரூபாவுக்கு காணியொன்றைக் கொள்வனவு செய்து, பின்னர் ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்தால், பொதுவாக 10 இலட்சம் ரூபாவே இலாபமாகக் கணக்கிடப்படும்.

எனினும், ஆரம்பக் கொள்வனவுக்கான பணம் உரிய கொடுப்பனவு நடைமுறைகளைப் பின்பற்றாமல் செலுத்தப்பட்டிருந்தால், அந்த 90 இலட்சம் ரூபா கொள்வனவுச் செலவை வரிக் கணக்கீட்டில் கழிக்க முடியாத நிலை ஏற்படலாம்.
இதனால் உண்மையான இலாபத்திற்குப் பதிலாக முழு விற்பனைத் தொகையான ஒரு கோடி ரூபாவின் அடிப்படையில் வரி கணக்கிடப்படக்கூடும் என அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
முறையான நிதிப் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் முறைசாரா நிதிச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது