பொரளை ஹோட்டல் தீவிபத்து; பொலிஸார் சந்தேகம்
கொழும்பு, பொரளை, வோர்ட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (23) திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, பொலிஸாரின் தடயவியல் பிரிவு அதிகாரிகள் இன்று (24) செவ்வாய்க்கிழமை காலை சம்பவ இடத்திற்குச் சென்று விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஹோட்டலின் சமையலறைப் பகுதியிலேயே தீ விபத்து ஆரம்பமாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளதுடன், உள்ளே இருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளன. மின் கசிவினாலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தீ விபத்து ஏற்பட்ட வேளையில் ஹோட்டலுக்குள் தங்கியிருந்த ஆறு வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வேறு ஒரு ஹோட்டலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், கட்டடத்திற்குள் இருந்து புகையை சுவாசித்த பலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.