சர்வதேச நாணய நிதியம் வழங்கிய இலக்கு: ரணில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாட்டில் முடங்கிப் போயுள்ள பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe தெரிவித்துள்ளார்.'
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (17) அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பிலேயே ரணில் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்குச் தள்ளப்பட்டமை மற்றும் தங்களது எதிர்காலம் தொடர்பில் இளையவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசியல்வாதிகள் தொடக்கம் அரசாங்க அதிகாரிகள் வரையில் அனைவரும் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த ஜனாதிபதி,
சகலரும் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கடந்த கால தவறுகளை திருத்திக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின் சில அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியது அவசியமென வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி,
மக்கள் பணம் வீணடிக்கப்படுவதை தவிர்க்க வேண்டுமெனில் அமைச்சரவை செயலாளர்கள் அமைச்சுகளுக்கு கீழே உள்ள நிறுவனங்களை பாதுகாப்பதற்கு மாறாக அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.