கனடாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி; பாதுகாப்பு அமைச்சராக தமிழ்ப் பெண் நியமனம்!
கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தலைமையிலான கட்சி மூன்றாவது முறையாக வெற்றிபெற்று கனடாவில் ஆட்சியமைக்கின்றது. இந்த புதிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய அமைச்சரவை பட்டியலில் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில், கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் (Anita Anand) நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழ்நாட்டின் - வேலூரை பூர்வீகமாகக் கொணடவர். அனிதா ஆனந்த்தின் தந்தை சுந்தரம் விவேகானந்தன் ஒரு மருத்துவர் ஆவார். அனிதாவின் தாயார் பெயர் சரோஜ் ராம், இவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸைச் சேர்ந்தவர் .
இந்நிலையில், கனடா பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்கும் தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த் அவர்களுக்கு, தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், பாமகவின் நிறுவனுருமான மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக தமிழ்நாட்டு மரபுவழியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் அமர்த்தப்பட்டுள்ளார். கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கும் இரண்டாவது பெண் இவர் என்பது கூடுதல் சிறப்பு. அவருக்கு வாழ்த்துகள்!#Canada #TamilPride
— Dr S RAMADOSS (@drramadoss) October 27, 2021
"கனடா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக தமிழ்நாட்டு மரபுவழியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் (Anita Anand) அமர்த்தப்பட்டுள்ளார். கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கும் இரண்டாவது பெண் இவர் என்பது கூடுதல் சிறப்பு. அவருக்கு வாழ்த்துகள்" என மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 1990ம் ஆண்டுக்கு பின் கனடா நாட்டின் வரலாற்றில் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டாவது பெண்மணி அனிதா ஆனந்த் (Anita Anand) என்பது குறிப்பிடத்தக்கது.