பிரான்சில் மூன்று பிள்ளைகளின் தாயான தமிழ் பெண் கொலை; கணவன் கைது!
பிரான்சில் தமிழ் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரிஸ் புறநகரான Yvelines மாவட்டத்தின் Achères பகுதியில், 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை சந்தேகத்தில் கணவர் கைது
கடந்த சனிக்கிழமை (3) காலை காவல்துறை மற்றும் அவசரச் சேவையினரின் பெருமளவான வருகையைப் பார்த்த பின்னரே துயரமான சம்பவம் குறித்து அயலவர்கள் அறிந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது 47 வயதுடைய கணவர் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில் அவசர உதவிச் சேவைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர், தனது மனைவியைத் தானே கொலை செய்ததாகத் தெரிவித்ததாக விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது அவர் Mantes-la-Jolie பகுதியில் உள்ள தனது சகோதரரின் வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் Achères பகுதியில் உள்ள குடும்பத்தின் வீட்டுக்குச் சென்றனர்.
அங்கு 40 வயதுடைய பெண் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அவர் அவசரச் சேவைக்கு அழைப்பு விடுக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயலவர்கள் அந்தப் பெண்ணை , அனுஷா மிகவும் அமைதியானவர், மென்மையான குணமுடையவர் அவர்கள் குடும்பமும் எவ்விதப் பிரச்சனைகளுமற்ற முன்னுதாரணமான குடும்பமாகவே காணப்பட்டது” எனத் தெரிவிக்கும் அயலவர்கள், சனிக்கிழமை காலையில் காவல்துறையினரின் குவிப்பைக் கண்ட பின்னரே இந்தத் துயரச் சம்பவத்தை அறிந்து உறைந்துபோயுள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி, உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் கொலை நடைபெற்ற விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை காவல்துறையின் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஆராய்ந்து வருகிறது.