தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் வீட்டில் மற்றுமொரு துயரம்; நிர்க்கதியில் பிள்ளைகள்
தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமான நிலையில் , ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஆதரவின்றி நிக்கதியில் உள்ளனர்.
கணவரின் பிரிவால் , ஆனந்தசுதாகரின் மனைவி 2018 ஆம் ஆண்டு நோயுற்ற நிலையில் மரணமானார்.

பொய் வாக்குறுதி வழங்கிய மைத்திரி
இதனால் அநாதரவாக நிர்க்கதியாகநின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா அம்மா (வயது 75) நோயுற்ற நிலையில், கடந்த சில தினங்களாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். "தகப்பன் வந்தால் பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு போயிடுவன் இவங்களும் விடுறாங்களில்ல , தனது உறவினர்களிடம் அவர் கவலை வெளியிட்டதாக கூறப்படுகின்றது.

ஆனந்தசுதாகரனின் மனைவி உயிரிழந்த நிலையில் , இறுதி சடங்கில் கலந்து கொள்ள சிறைச்சாலை வாகனத்தில் ஆனந்த சுதாகரன் அழைத்து வரப்பட்டு , மீண்டும் சிறைக்கு அழைத்து செல்ல தயாரான போது அவரது மகளும் அப்பாவுடன் செல்ல போகிறேன் என கூறி சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய ஒளிப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பொது மன்னிப்பில் ஆனந்தசுதாகரனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த போதும் இன்று வரை ஆனந்தசுதாகரன் விடுதலை இன்றி சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தாய் இல்லாத நிலையில், தந்தையின் அரவணைப்பிற்காக ஏங்கித் தவிக்கும் ஆனந்த சுதாகரனின் மகள் சங்கீதா, ஜனாதிபதி அனுர குமார அரசாங்கமாவது தனது தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என, கடந்த சில மாதங்களின் முன்பு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.