தமிழ் பிரதேசங்களில் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற ஒன்றுக்கூடும் தமிழ் கட்சிகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாகிய நாம் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றை சந்தித்து பேசியிருக்கின்றோம். அவர்கள் முன்னிலை வகிக்கும் இடங்களில் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்க தயாராக இருக்கிறோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அவரது இல்லத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதிக ஆசனங்கள்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எம்மை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இப்போது இருக்கக்கூடிய ஆளும் தரப்பு உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதை தவிர்த்து, தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக் கூடியவர்கள் இந்த மாகாண ஆட்சி அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் தான் நாங்கள் ஈடுபடுகின்றோம்.
அந்தவகையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ஆசனங்களை வைத்திருக்கும் இடங்களில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் நாங்கள் தெரிவித்திருக்கின்றோம். பல இடங்களில் தமிழரசு கட்சி முன்னிலை வகித்தாலும் அறுதிப் பெரும்பான்மை என்ற விடயங்கள் பெரும்பாலான இடங்களில் இல்லை.
ஆகவே ஆட்சி அமைப்பதற்கு அவர்களுக்கு ஏனைய கட்சிகளின் ஆதரவுகள் தேவை. எங்களிடமும் அந்த ஆதரவை கோரியிருந்தார்கள். ஆகையால் அவர்களுக்கான ஆதரவுகளையும் நாங்கள் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். அதேசமயம் இந்த கூட்டு என்பது வெறுமனே ஆட்சி அதிகாரங்களுடன் போய்விட கூடாது.
தமிழ் மக்களுடைய அதிகாரங்களை அல்லதை உரிமைகளை பெற்றுக் கொள்வதை நோக்கி இது நகர வேண்டும். நான்கு சபைகளில் தவிசாளர் அதிகாரங்களை எமக்கு தருமாறு நாங்கள் கோரியிருக்கின்றோம். அந்தவகையில் மன்னார் - மாந்தை, சாவகச்சேரி, கோப்பாய், மானிப்பாய் ஆகிய பிரதேச சபைகளில் இவ்வாறு தவிசாளர் அதிகாரங்களை வழங்குமாறு கோரியிருந்தோம்.

பெண்கள் தங்கள் மானத்தை காப்பாற்ற இறந்தாலும் பரவாயில்லை ; சர்ச்சையை கிளப்பும் தமிழ் எம்பியின் கருத்து
எம்மை பொறுத்தவரை நாங்கள் ஒரு தெளிவான விடயத்தில் இருக்கின்றோம், வடக்கு - கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் ஆட்சி அதிகாரங்கள் என்பது தமிழ் மக்களின் கைகளில் இருக்க வேண்டும், தமிழ் தேசியத்தை அங்கீகரிப்பவர்களது கைகளில் இருக்க வேண்டும் என்றார்.