ரெலோவின் வரைபிற்கு எதிராக அரசியல்குழுவில் தமிழரசுக் கட்சி அதிரடி தீர்மானம்
தமிழ் பேசும் கட்சிகளின் நாளை கலந்துரையாடலில் பங்குபெறுவது என இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும் ரெலோ தற்போது தயாரித்துள்ள வரைபை நிராகரிப்பதென்றும் தீர்மானித்துள்ளோம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் இன்று காலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இதில், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், த.கலையரசன், கி.துரைராசசிங்கம், குலநாயகம், கே.வி.தவராசா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, தமிழ் பேசும் கட்சிகளின் நாளைய கலந்துரையாடல் தொடர்பாக ஆராயப்பட்டது. இந்த கூட்டத்திற்கு செல்லாமல் விட்டால், பலத்த விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என பலரும் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, நாளைய சந்திப்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை, இந்த கலந்துரையாடலின் இறுதியில் கையெழுத்திடுவதற்காக ரெலோ தயாரித்த ஆவணத்தை ஏற்பதில்லையென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பரப்பிலுள்ள பெரிய கட்சி என்ற அடிப்படையில், தாம் தயாரிக்கும் ஆவணத்தில் ஏனைய கட்சிகள் கையெழுத்திட வேண்டுமென இதில் கூறப்பட்டது.
நாளை சந்திப்பிற்கு செல்லும் போது, தமிழ் அரசு கட்சி தரப்பிலிருந்து வரையொன்றை கொண்டு செல்வதென்றும், ஏற்கனவே உள்ள வரைபையும், புதிய வரைபையும் இணைத்து, வேறொரு வரைபில் கையெழுத்திடுவது அல்லது தமிழ் அரசு கட்சியின் வரைபில் ஏனைய கட்சிகள் கையெழுத்திடட்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.