அயலகத் தமிழர் தினம் 2023 ; புலம்பெயர் தமிழர் உட்பட 58 நாடுகளில் இருந்தும் பங்கேற்கும் தமிழர்கள்
தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 3-ம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு அயலக தமிழர் தின விழாவை, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் (11) , நாளையும் (12) என 2 நாட்கள் நடத்துகிறது.
இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், மந்திரிகள், கல்வியாளர்கள், கவிஞர்கள் பங்கேற்கின்றனர்.
இலங்கை அரசியல்வாதிகள் புலம்பெயர் தமிழர்களும் பங்கேற்பு
அதன்படி வெளிநாடுகளில் வாழும் 1,400-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க பதிவுசெய்து உள்ளனர். இதில், 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகியவற்றை சேர்ந்த வெளிநாடுவாழ் தமிழர்கள் பங்கேற்கும் நிலையில் எமது புலம்பெயர் தமிழர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை அரசியல்வாதிகளும் கலந்து கொண்டுள்ளனர். அந்தவகையில் இலங்கை நாளாடுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மனோ கணேசன், இரா சாணக்கியன் மற்றும் கிழக்கின் ஆளுநனர் செந்தில் தொண்டமான், ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கி வைத்து பேசுகிறார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட அயலக தமிழர் கண்காட்சி அரங்குகளையும் திறந்துவைக்கிறார். மேலும், கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு அயலக தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறும்.
விழாவில், சிறப்பு நிகழ்ச்சிகளாக 4 கலந்துரையாடல்களும், ஒரு கவியரங்கமும் நடைபெறுகின்றன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) விழா பேருரை நிகழ்த்துவதுடன், 'எனது கிராமம்' என்ற முன்னோடி திட்டத்தையும் தொடங்கிவைக்கிறார்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் வெளிநாடுவாழ் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இந்த திட்டத்தின் வாயிலாக செயல்படுத்த வகை செய்யப்பட்டு உள்ளது.
நிகழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர் நலன், வணிகம், தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்.