மட்டக்களப்பில் தாரைவார்க்கப்படும் தமிழர் நிலங்கள்; திடீரென மாயமான தமிழ் எம்பிக்கள்!
மட்டக்களப்பில் தமிழர்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசம் ஒன்றில் தெற்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்களவர்களுக்கு காணி வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இதன்போது குடும்பம் ஒன்றுக்கு 20 பேர்ச் காணி என்ற ரீதியில் காலி, மாத்தறை, தம்புள்ள, கம்பஹா, கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கு காணி உறுதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் இவ்வாறு குடியேற்றப்பட்டவர்களில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட சிலரும், இராணுவத்தில் கடமையாற்றிய சிலரும் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்த காணி வழங்கும் நிகழ்வு TMVP என்ற பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் முன்னிலையில் நடைபெற்றதானது, வெளிமாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்களவர்களுக்கு காணி வழங்கும் விடயம் TMVP தலைமையில் நடைபெற்றதா என்கின்ற சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்களின் விருப்பம் இல்லாது அவர்களுக்காகப் போராடவென்று வடக்குக்குச் சென்று குழப்பம் விளைவித்த உறுப்பினர், தமிழ் அரசியல் கைதிகளை அவமதித்த அமைச்சருக்கு செங்கம்பளம் விரித்து வரவேற்பளித்த இராஜாங்க அமைச்சர்,
அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா மட்டக்களப்புக்கு வருகைதந்த போது அழைக்கப்படாமலேயே ஆஜராகி புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க எத்தி நின்ற கிழக்கை மீட்கும சருகுப் புலி, தொகுதிக்கு சவ ஊர்தியையும், அம்பியூலன்சையும் அனுப்பிவைத்துவிட்டு வீட்டில் இருந்தபடி அரசியல் செய்யும் உறுப்பினர்,
இப்படி, மட்டக்களப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினருமே இந்த நில அபகரிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன் குறைந்தபட்சம் எதிர்ப்பைக்கூட இவர்கள் வெளியிடவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.








