T10 சுப்பர் லீக் தொடர்; இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்!
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் இவர் நேற்றைய தினம் விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் பிரினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபரான இந்திய பிரஜை லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரில் பங்குபற்றிய மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவரிடம் பணத்துக்காக போட்டியை காட்டிக்கொடுப்பதற்கு முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்நாட்டில் விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.
அதன்படி நேற்று குறித்த பிரிவைச் சேர்ந்த குழுவினர் பல்லேகல பகுதிக்கு சென்று இந்திய பிரஜையிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.