யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்; வீடுகள் தீக்கிரை; வெட்டுக்குமார் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், சில வீடுகள் சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வாள்வெட்டு குழு ரவுடியான "வெட்டுகுமார்" என்பவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன்,தலைமறைவாகியுள்ள மேலும் சிலரை தேடிவருகின்றனர்.
கடந்த 2 ஆம் திகதி மது போதையில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தை சேர்ந்த வாள்வெட்டு குழு ரவுடியான வெட்டுக்குமாரும் அவரது கூட்டாளிகளும் இணைந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டதில், 6 குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் இரு வீடுகளுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த குறித்த கும்பல் சில வீடுகளின் ஜன்னல்கள் உடைத்தும், சொத்துக்கள் உடமைகள் என்பவற்றுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் ரவுடி வெட்டிக்குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவனது சகோதரன் ஜெயா என்ற ரவுடி உட்பட சிலர் தலைமறைவாகியுள்ளதாக தொியவருகின்றது. இந்நிலையில் தினமும் தாம் ரவுடிகள் குழுவுன் அச்சத்துடன் வாழ்வதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
