யாழில் வாள்வெட்டு குழு பெற்ரோல் குண்டு தாக்குதல்!
யாழ்.நவாலி பகுதியில் இன்று அதிகாலை வீடு புகுந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் தாக்குதல் நடத்தவந்த வாள்வெட்டு குழு ரவுடி வீட்டாரினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், திருச்சபை வீதி நவாலி வடக்கு பகுதியிலுள்ள நடராசா அருள் ரொபின்சன் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த வாள்வெட்டு குழு , வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பட்டாரக வாகனத்தின் மீது பெற்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியது.
அதோடு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டு உள்நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டிலிருந்த இளைஞனின் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை இளைஞன் தப்பித்த நிலையில் அவரின் தந்தை மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றது. இதனால் குடும்பஸ்தரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அயலவரின் உதவியுடன் வாள்வெட்டு கும்பலில் ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டதுடன் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தாமதமாக அங்கு வந்த பொலிஸார், வள்வெட்டு குழு நபரை கைது செய்ததோடு மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.