இந்தியர்களை சினம் கொள்ளவைத்த சுவிஸ் ஹோட்டல் அறிவிப்பு மீண்டும் வைரல்
சுவிட்சர்லாந்தின் க்ஸ்டாட் நகரில் அமைந்துள்ள Arc-en-ciel Hotel வெளியிட்டிருந்த இந்திய விருந்தினர்களுக்கான சிறப்பு அறிவிப்பு தொடர்பான பழைய சர்ச்சை மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
முதன்முதலில் 2019ஆம் ஆண்டில் வெளியாகி சர்வதேச அளவில் விமர்சனங்களை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு, அண்மையில் இந்திய தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா மீண்டும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
அந்தக் காலத்தில், ஹோட்டலில் தங்கியிருந்த பிற விருந்தினர்களிடமிருந்து சத்தம் மற்றும் உணவு மேசை ஒழுங்கு தொடர்பான புகார்கள் கிடைத்ததாகக் கூறி, “Dear Guests from India” (அன்புள்ள இந்திய விருந்தினர்களே) என்ற தலைப்பில் ஹோட்டல் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், காலை உணவு பஃபேவில் இருந்து உணவுகளை வெளியே எடுத்துச் செல்லக் கூடாது என்றும், மதிய உணவுக்காக தேவையெனில் கட்டண அடிப்படையில் லஞ்ச் பேக்குகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், உணவு உண்ணும்போது வழங்கப்பட்ட கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், ஹோட்டலின் பொதுப் பகுதிகள் மற்றும் நடைபாதைகளில் அமைதியைப் பேண வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை அப்போது ஹோட்டலில் தங்கியிருந்த இந்திய தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா புகைப்படம் எடுத்து தனது சமூக ஊடக கணக்கில் பகிர்ந்திருந்தார். அதனுடன், “இதைப் பார்த்து நான் கோபமடைந்ததுடன் அவமானப்படுத்தப்பட்டதாகவும் உணர்கிறேன்” என அவர் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, அந்தப் பதிவு சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஊடகங்களில் செய்தியாக வெளியானது.
ஹோட்டலின் நடவடிக்கை இந்தியர்களை பொதுவாக குற்றம் சாட்டுவதாகவும், இனவாத மனப்பான்மையை வெளிப்படுத்துவதாகவும் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டது.
சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, Arc-en-ciel Hotel குறித்த அறிவிப்பை அகற்றி அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியது.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும், அறிவிப்பில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் பொருத்தமற்றதாக இருந்ததாகவும் ஹோட்டல் நிர்வாகம் அப்போது விளக்கமளித்திருந்தது.
தற்போது, ஹர்ஷ் கோயங்கா மீண்டும் இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இந்திய சுற்றுலாப் பயணிகளின் நடத்தை, கலாச்சார உணர்வுகள் மற்றும் விருந்தோம்பல் துறையில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து புதிய விவாதங்கள் உருவாகியுள்ளன.
குறிப்பிட்ட சமூகத்தினரை தனித்து அடையாளப்படுத்தி விதிமுறைகள் விதிப்பதன் விளைவுகள் மற்றும் உலகளாவிய சுற்றுலாத்துறையில் கலாச்சார மரியாதையின் முக்கியத்துவம் குறித்து மீண்டும் கவனம் செலுத்த வைத்த நிகழ்வாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
A Swiss hotel once displayed a list of special rules exclusively for Indian guests which I personally saw and was appalled.
— Harsh Goenka (@hvgoenka) May 31, 2026
Today, videos of garba in restaurants, loud conversations in airports, and turning aircraft cabins into picnic spots keep doing the rounds. Even in Davos,… pic.twitter.com/ccljdLmDfk