தமிழர் பகுதியொன்றில் பாடசாலைக்கு அருகில் கிடந்த பாகிஸ்தான் நாட்டு பொருளால் பரபரப்பு
அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில், பாடசாலை ஒன்றிற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் நேற்று (06) வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கைக்குண்டு பாகிஸ்தான் நாட்டு தயாரிப்பு என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாடசாலைக்குத் தனது பிள்ளையை அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், காணியில் கைக்குண்டு இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

பாகிஸ்தான் தயாரிப்பு
இப்பகுதியில் அண்மையில் உழவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாலும், பெய்த மழை காரணமாகவும் மண்ணுக்குள் புதைந்திருந்த கைக்குண்டு வெளியில் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.
அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சவளக்கடை பொலிஸார், குண்டு கிடந்த பகுதியைச் சூழப் பாதுகாப்பை பலப்படுத்தினர்
மீட்கப்பட்ட கைக்குண்டு பாகிஸ்தான் நாட்டு தயாரிப்பு என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இப்பகுதியில் நடமாடிய விடுதலைப் புலிகளினால் இது கைவிடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
குண்டை அவ்விடத்திலிருந்து அகற்றிச் செயலிழக்கச் செய்வதற்காக நீதவான் நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
சவளக்கடை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.