கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடவடிக்கையால் எழுந்துள்ள பாரிய சந்தேகம்!
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) இன்று வரையில் யாழ்.மாநகர சபை வரவு செலவு திட்டம் தொடர்பில் எதுவும் அறிந்திராத வகையில் உள்ளாரா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
யாழில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14-12-2021) ஊடகவியலாளர்களை சந்தித்த போது, நாளைய தினம் (15-12-2021) புதன்கிழமை யாழ்.மாநகர சபையில், முதல்வரால் சமர்ப்பிக்கப்படவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில், தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்னென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதன்போது கஜேந்திரகுமார், அருகில் இருந்த சக நாடாளுமன்ற உறுப்பினரான செ. கஜேந்திரனிடம் , "அந்த வரவு செலவுத்திட்டம் எப்ப வருகுது ?" என வினாவினார். அதற்கு சக நாடாளுமன்ற உறுப்பினர் செ கஜேந்திரன், ஓரிரு செக்கன் யோசித்து விட்டு, " நாளைக்கு " என பதிலளித்ததும், "நாளைக்காக? நாளைக்கு உங்களுக்கு தெரியும்" என பதிலளித்தார்.
யாழ்.மாநகர சபை வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு, தற்போதைய முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சில மாநகர சபை உறுப்பினர்கள் காய் நகர்த்தல்களை முன்னெடுப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதுடன், அது தொடர்பில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையிலே மாநகர சபை பாதீட்டு கூட்டம் எப்போது என்பதனை அறியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் உள்ளாரா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யாழ்.மாநகர சபையில் 13 உறுப்பினர்கள் உள்ள நிலையில், யாழ்.மாநகர சபை முதல்வர் உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் ஒரு அணியாக செயற்பட்டு வரும் நிலையில், மூன்று உறுப்பினர்கள் முதல்வருக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.