கள்ளத்தொடர்பு சந்தேகம்; மனைவியை பெற்றோல் ஊற்றி எரித்த கணவன்!
இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம் ஜகத்பூர் கிராமத்தில், கள்ளத்தொடர்பு சந்தேகத்தின் காரணமாக 30 வயது பெண்ணை அவரது கணவரே நாற்காலியில் கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்ட பெண் சோனம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது கணவர் சுக்பீர் சிங் என்ற மோனு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு சோனமை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இளைஞருடன் கள்ளத்தொடர்பு சந்தேகம்
ஹரியானா மாநிலம் ஹிசாரில் வேலை பார்த்து வந்த சுக்பீர், 15 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். தன் மனைவிக்கு கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த சுக்பீர், அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று ஆத்திரமடைந்த சுக்பீர், மனைவியை நாற்காலியில் வலுக்கட்டாயமாக கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். வீட்டிலிருந்து கிளம்பிய அடர்ந்த புகையை கண்டு ஓடிவந்த கிராம மக்கள், தீயணைப்பு துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போது, சோனம் உடல் கருகி எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டார்.
குற்றத்தை செய்த சுக்பீர், தனது 7 மற்றும் 5 வயது குழந்தைகளுடன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுவதுடன் , கணவனை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.