கொள்கலன் வாகனத்துடன் ஒருவர் கைது ; அரங்கேறிய சட்டவிரோத செயற்பாடு அம்பலம்
வரி செலுத்தாமல் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன் வாகனமொன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரம்பாவ பகுதியில், நேற்று (14) மதியம் குளியாப்பிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரம்பாவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கொள்கலன் வாகன சோதனையின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 190 மதுபானப் போத்தல்கள், மோட்டார் சைக்கிள் பாகங்கள், 42 மோட்டார் சைக்கிள் சேஸ்கள் மற்றும் 44 மோட்டார் சைக்கிள் இயந்திரங்கள், சைக்கிள்கள் மற்றும் சைக்கிள் பாகங்கள், பெருமளவிலான விவசாய உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இக்கொள்கலன் வாகனத்தை முழுமையாக சோதனை செய்வதற்காக, குளியாப்பிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு உதவியாக குருணாகல் மற்றும் புத்தளம் விசேட அதிரடிப்படை முகாம்களைச் சேர்ந்த சோதனை அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.