பெண் செய்தியாளருக்கு திடீரென இன்ப அதிர்ச்சி கொடுத்த வடகொரிய அதிபர்!
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong un) பெண் செய்தியாளர் ஒருவருக்கு அடுக்குமாடி சொகுசு பங்களாவை திடீரென்று பரிசளித்து அசத்தியுள்ளார். இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
வடகொரியாவின் அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். மேலும் இவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். அடிக்கடி ஏவுகணை, அணுஆயுத சோதனைகளை நிகழ்த்தி வல்லரசான அமெரிக்காவையே அலற வைப்பவர்.

உலக நாடுகளின் கண்டனங்களை காதில் வாங்கி கொள்ளாத இவர் நாட்டின் சட்டத்திட்டங்களை மீறுவோருக்கு விசித்திர தண்டனைகளையும் வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் தான் இவர் அனைத்து நாடுகளில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தான் கிம் ஜாங் உன் 70 வயது நிரம்பிய பெண் தொகுப்பாளருக்கு அடுக்குமாடி சொகுசு பங்களாவை நேற்று பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதேவேளை, வழக்கமாக தண்டனைகள் தானே வழங்குவார். இப்போது பரிசு வழங்கி உள்ளாரே என நீங்கள் கேட்பது புரிகிறது. எதற்காக இந்த பரிசு வழங்கினார்.

அந்த பெண் செய்தியாளர் யார் என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு,
வடகொரியாவின் அரசு செய்தி தொலைக்காட்சியில் மூத்த தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் ரி சுன் ஹி. இவர் கடந்த 1970ஆம் ஆண்டில் பணிக்கு சேர்ந்த நிலையில் 52 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
குறிப்பாக 1994-யில் நிகழ்ந்த தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன் தாத்தா கிம் இல் சுங் மரணம் முதல் 2006ல் நடந்த அணு ஆயுத சோதனை வரை வடகொரியாவின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை இவர் தான் தொகுத்து வழங்கினார்.

துக்க செய்திகளை சோகமாக கூறி பார்வையாளர்களை அதன் வலி, வேதனைகளை உணர செய்வதிலும், மகிழ்ச்சியான செய்திகளை அதற்கேற்ற வார்த்தைகளை பயன்படுத்தி அனைவரையும் கொண்டாட வைப்பதிலும் ரி சுன் ஹி பெயர் பெற்றவராம்.
இந்நிலையில் தான் அவருக்கு அடுக்குமாடி சொகுசு பங்களாவை கிம் ஜாங் உன் வழங்கியுள்ளார். மேலும் அவர் ரி சுன் ஹியின் கையை பிடித்து பங்களாவை சுற்றி காட்டியுள்ளார்.
இதுபற்றி கிம் ஜாங் உன் கூறுகையில்
"ரி சுன் ஹி சிறுவயதில் இருந்தே தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவர் நாட்டின் "பொக்கிஷங்களில்" ஒருவர். இந்த பொக்கிஷத்தை அவ்வளது எளிதாக விட்டு விட முடியாது.

இவர் எனது ஆட்சியின் குரலாக தொடர்ந்து பணியாற்ற வேண்டும்'' என கூறியுள்ளார். மேலும் ரி சுன் ஹியிடமும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதுபற்றி ரி சுன் ஹி கூறுகையில்,
‛‛பங்களா சொகுசு ஓட்டல் போன்று உள்ளது. கிம் ஜாம் உன்னுக்கு நன்றி. இதை கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. இந்த பரிசை நினைத்து எனக்கும், குடும்பத்தினருக்கும் தூக்கம் வரவில்லை'' என்றார்.
இந்த ரி சுன் ஹி, கிம் ஜாங் உன்னுடன் நேரடி தொடர்பில் இருப்பவர். சமீபத்தில் நடந்த ராணுவ அணிவகுப்பின்போது கிம் ஜாங் உன்னுக்கு அடுத்தபடியாக உயரமான பால்கனியில் இருந்து பார்வையிட்டார்.
மேலும் கிம் ஜாங் உன்னை யாரும் நெருங்க முடியாத சூழல் உள்ள நிலையில் அவரை தொட்டு பேசும் அளவுக்கும், பொது வெளியில் கைக்குலுக்கி பேசும் அளவுக்கும் ரி சுன் ஹி மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவின் நிறுவன தலைவராக உள்ள கிம் இல் சுங்கின் 110வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தான் இந்த பரிசை அவருக்கு கிம் ஜாங் உன் வழங்கியுள்ளார்.
மேலும், இதேபோன்று நாட்டுக்கு சேவையாற்றிய மற்றும் தனக்கு நேர்மையாக செயல்பட்டவர்களுக்கு கிம் ஜாங் உன் வீடுகளை பரிசாக வழங்கியுள்ளார். இந்த பங்களா, வீடுகள் அனைத்தும் பியோங்யாங் நகரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.