நீதிமன்றத்தில் வெளியான சுரேஸ் சல்லேவின் மருத்துவ அறிக்கை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவது தொடர்பான முடிவு, மருத்துவக் குழுவின் கூட்டத்திற்குப் பின்னரே எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான விசாரணை நேற்று (22) கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இடம்பெற்றபோது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சல்லே கடந்த ஜூன் 7ஆம் திகதி முதல் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரின் உடல்நிலை தொடர்பில் ஒன்பது பேர் கொண்ட மருத்துவக் குழு தயாரித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், அவரது இதயம் வீக்கமடைந்துள்ளதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவ சாதனம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாதனத்திற்காக அரச நிதியில் சுமார் 4 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் சுரேஷ் சல்லேவை மருத்துவமனையில் தொடர்ந்து வைத்திருப்பது விசாரணைகளை முன்னெடுப்பதில் தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மருத்துவக் குழு அவரை விடுவிக்க அனுமதிக்கும் பட்சத்தில், உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்து விசாரணைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மருத்துவக் குழு எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ளதாகவும், அன்றைய தினம் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டுமா அல்லது விடுவிக்கப்படலாமா என்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, சுரேஷ் சல்லேவுக்குச் சொந்தமான மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான கடவுச்சொற்கள் தொடர்பிலும் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
கடவுச்சொற்களை வழங்காத நிலையில், மாற்று வழிகளைப் பயன்படுத்தி அவற்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
மேலும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக வவுனியா கவசப் படைப்பிரிவின் புலனாய்வுப் பிரிவு உணவக வருகைப் பதிவேடு மற்றும் தினசரி பதிவேடு உள்ளிட்ட குறிப்பிட்ட ஆவணங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு வவுனியா கவசப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரிக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.