தமிழர் பகுதியில் தேரரின் கொட்டத்தை அடக்குங்கள்! வெடித்த போராட்டம்
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில் தேரரை வெளியேற்றக் கோரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியதுடன் அப்பகுதியில் பதற்ற நிலைமையும் ஏற்பட்டது.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவின் கெவுளியாமடு கிராமத்தில் அமைந்துள்ள பன்சலகல விகாரைக்கு முன்னாலுள்ள பொதுமக்களின் குடியிருப்புகளை அகற்றி தனக்கு காணிகளை வழங்க வேண்டும் என பட்டிப்பளை பிரதேச யெலாளரிடம் தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் குறித்த காணி தொடர்பான உரிமம் பிரதேச செயலாளரிடம் இல்லையெனவும் வன இலாகாவிடமே உள்ளதாகவும் பிரதேச செயலாளர் கூறிய நிலையில் தனக்கு காணியை வழங்க வேண்டும் எனக் கூறி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன் பிரதேச செயலகத்துக்குள் போராட்டத்தை நடத்திய தேரர் பிரதேச செயலாளரின் அறைக்குள் சென்று போராட்டத்தை முன்னெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் தேரருடன் பேச்சுவார்த்தை நடாத்தி சமரசம் செய்ய முற்சித்த போதிலும் தேரர் அதனை செவிமடுக்காது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அதன்பின்னர் குறித்த காணியானது தனது அதிகாரத்திற்குள் இல்லையெனவும் வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான காணியொனவும் பிரதேச செயலாளரினால் கடிதம் வழங்கப்பட்டதை தொடர்ந்து தேரர் அங்கிருந்து சென்றார்.
அதேவேளை குறித்த பிக்குவின் செயற்பாட்டைக் கண்டித்து பிரதேச செயலகத்திற்கு முன்பாக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பிளாந்துறை-பட்டிப்பளை பிரதான வீதியை மறித்து உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அங்கிருந்து தேரர் சென்றதும் ஊழியர்களும் தமது போராட்டத்தை கைவிட்டு கடமைக்கு திரும்பியிருந்தனர். எனினும் அரசாங்க உத்தியோகத்தர்களின் கடமைகளைச் செய்யவிடாது தடுத்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
தேரரால் முடங்கிய பட்டிப்பளை பிரதேச செயலக செயல்பாடுகள்!


